பெருந்துறை அருகே தொழில் அதிபர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை

பெருந்துறை அருகே தொழில் அதிபர் வீட்டில் 11 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-07-09 21:45 GMT

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையம் அன்னை கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 57), அவருடைய மனைவி பானு (50). இவர்களுடைய மகள் பிரியங்கா, மகன் கார்த்தி. இருவரும் பட்டதாரிகள்.

சுந்தரமூர்த்தி கவுந்தப்பாடியில் டயர் விற்பனை ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி வெளியூர் சென்றுவிட்டார். பானு, பிரியங்கா, கார்த்திக் மூவரும் வீட்டை பூட்டிவிட்டு பெருந்துறை எல்லைமேடு முத்து நகரில் உள்ள சுந்தரமூர்த்தியின் தம்பி புவனேஷ்வரன் என்பவர் வீட்டுக்கு சென்றனர்.

இந்தநிலையில் வெளியூரில் இருந்து சுந்தரமூர்த்தி நேற்று அதிகாலை 4½ மணி அளவில் வீட்டுக்கு வந்தார். முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது 2 வது கதவு தாழ்போடும் இடத்தில் உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது.

கதவு உடைக்கப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 இரும்பு பீரோ, ஒரு மர பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வெளியே சிதறிக்கிடந்தன. பீரோவுக்குள் வைக்கப்பட்டு இருந்த 11 பவுன் நகைகளை காணவில்லை.

பானு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பீரோ சாவிகளை டேபிள் மேல் வைத்துவிட்ட சென்றதாக தெரிகிறது. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முன்பக்க சுவர் ஏறி குத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் 2–வது கதவில் தாழ்போடு பகுதியில் துளையிட்டு கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு டேபிளிலேயே சாவி கிடந்ததால் அதை எடுத்து பீரோக்களை திறந்து நகைகளை கொள்ளை அடித்துச்சென்றுவிட்டது தெரிந்தது.

இதுபற்றி சுந்தரமூர்த்தி உடனே பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். கொள்ளை நடந்த வீட்டை பார்த்து விசாரணை நடத்தினார்கள்.

ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் 6 மாதமாக கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கேமரா முறையாக இயங்கி இருந்தால், கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பார்கள்.

மேலும் செய்திகள்