குடிபோதையில் தகராறு செய்ததால் தலையில் கல்லைப்போட்டு மகனை கொன்ற தாய்

சின்னாளபட்டியில், குடிபோதையில் தகராறு செய்ததால் மகனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-08 22:15 GMT

சின்னாளபட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மொட்டைபாண்டி. அவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 55). இவருடைய மகன் பார்த்திபன் (35). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

மொட்டைபாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மாரியம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். பார்த்திபனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது தாயாரை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

நேற்றும் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்து தாயாருடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் தனது தாயாரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள் அவரை கீழே தள்ளிவிட்டார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து மகன் என்று கூட பாராமல் தலையில் போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் இதுகுறித்து சின்னாளபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியம்மாளை கைது செய்தனர். மகனை, தாயே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்