மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மகள், மகனை கொன்று டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிவமொக்கா அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மகள், மகனை கொன்று டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2017-07-08 20:30 GMT

சிவமொக்கா,

சிவமொக்கா அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மகள், மகனை கொன்று டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கள்ளக்காதல்

சிவமொக்கா நகரையொட்டிய ராகிகுட்டா பகுதியை சேர்ந்தவர் சிவாநாயக் (வயது 35). கார் டிரைவர். இவருடைய மனைவி பிரேமா (29). இந்த தம்பதியின் மகள் யசஸ்வினி (5), மகன் பரத் (3). கார் டிரைவரான சிவா நாயக் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். இதனால், பிரேமா தனது மகள், மகளுடன் தனியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிரேமாவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சிவாநயாக், வெளியூர் செல்லும் சமயங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அரசல், புரசலாக சிவாநாயக்கிற்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர் பிரேமாவை கண்டித்துள்ளார்.

மகள்–மகனை கொன்று தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவா நாயக் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர், நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மனைவி வீட்டில் இல்லை. மகளும், மகனும் மட்டும் தான் இருந்தனர். இதனால் அவர் மனைவியை அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது, கள்ளக்காதலனுடன் மனைவி வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த சிவா நாயக், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மேலும் தான் சென்றுவிட்டால் தனது குழந்தைகள் அனாதையாகி விடுவார்களோ என பயந்த அவர், அவர்களையும் தன்னுடன் அழைத்து செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று மதியம், சிவா நாயக் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு தலையணையால் தனது குழந்தைகள் யசஸ்வனி, பரத் ஆகியோரின் முகத்தில் வைத்து அமுக்கி மூச்சை திணறடித்து கொலை செய்தார். பின்னர், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் சிவா நாயக், மகள் மற்றும் மகனை கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்