கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் 2 இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2017-07-09 03:15 IST
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சி 6-வது வார்டில் உள்ள வாய்க்கால் மேட்டுத்தெரு, சக்தி விநாயகர் கோவில் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இப்பகுதியில் கடந்ந ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் இப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பொது மக்கள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதியடைந்தனர். இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி சார்பில் வாரத்திற்கு இரண்டு முறை வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் வாய்க்கால் மேட்டுத் தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் நேற்று காலை 8.30 மணிக்கு காலி குடங்களுடன் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பீமராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சாலை மறியலை உடனடியாக கைவிடுங்கள், இல்லையென்றால் அனைவரையும் கைது செய்வோம் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காலை 9 மணி அளவில் நகராட்சி வாகனம் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டதால் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் 21-வது வார்டு விளாந்தாங்கல் சாலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் நேற்று மாலை 4.30 மணிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்ற பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்