ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை: இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு-தடியடி கலவரக்காரர்களுக்கு சித்தராமையா எச்சரிக்கை

மங்களூரு அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு நடைபெற்றது.

Update: 2017-07-08 22:00 GMT
மங்களூரு,

மங்களூரு அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜிபமூடா கிராமம் கந்தூர் பகுதியை சேர்ந்தவர் தனியப்பா மடிவாளா.

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்

இவருடைய மகன் சரத் மடிவாளா(வயது 30). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவர் பண்ட்வால் கிராஸ் ரோட்டில் சலவைக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4-ந் தேதி சரத், தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சரத்தை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில் தலை, கழுத்து பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சரத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊர்வலமாக...

இதுபற்றிய தகவல் அறிந்ததும், பண்ட்வால் தாலுகாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை அறிந்த இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு குவிந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சரத்தின் உடல் நேற்று காலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் அவருடைய உடலை பண்ட்வாலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட காரில் உடலை வைத்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து சரத்தின் வீட்டுக்கு அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டது. அவருடைய உடலை பார்த்து சரத்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

போராட்டம்-கல்வீச்சு


இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரத்தின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பி.சி.ரோடு, பரங்கிபேட்டை பகுதிகளில் இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

அப்போது திடீரென்று கற்கள் வீசப்பட்டன. இந்த கல்வீச்சில் 3 கார்கள், 2 பஸ்கள், 5 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதில் ஒரு ஏ.டி.எம். மையமும் சேதமடைந்தது. கல்வீச்சில் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் தடியடி


இதையடுத்து போலீசார், கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க தடியடி நடத்தினர். இதனால், அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவங்களால் அந்தப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

பண்ட்வால் தாலுகாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன், தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதிர் குமார் ரெட்டி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விஷ்ணுவர்த்தன் ஆகியோர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கடைகள் அடைப்பு

மேலும் அந்தப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்றும் யாரும் கடைகளை திறக்கவில்லை. பி.சி.ரோடு பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை தொடர்பாக பி.சி.ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதிர் குமார் ரெட்டி, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டு உள்ளார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சித்தராமையா எச்சரிக்கை


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

“தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்குள்ள நிலவரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கடலோர மாவட்டங்களில் மதக்கலவரங்கள் நடப்பதால் பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் அமைதியை கெடுக்கும்விதமாக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம்-ஒழுங்கு

சட்டத்தை கையில் எடுப் பவர்களை பார்த்து கொண்டு அரசு பொறுமையாக இருக்காது. அவர்கள் இந்துகளோ, வேறு மதத்தை சேர்ந்தவர்களோ, அல்லது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும். மதக்கலவரம் ஏற்படுவது தடுக்கப்படும்.

அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது பா.ஜனதாவின் வழக்கமாகும்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்