தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் பீதி

சேரம்பாடியில் தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2017-07-08 22:15 GMT

பந்தலூர்,

பந்தலூர், கூடலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்–1 பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அடிக்கடி காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

கடந்த 6–ந் தேதி இரவு 9 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட ரேஞ்ச் எண்–1 தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து, அங்கேயே சுற்றித்திரிந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பின்னர் அதிகாலை நேரத்தில் காட்டுக்குள் சென்றன.

பின்னர் நேற்று முன்தினம் மதியம் தேயிலை தொழிற்சாலை அருகே காட்டு யானைகள் வந்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் இணைந்து காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டத்துக்குள் வரும் என்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

இதனிடையே நேற்று சேரம்பாடி அருகே உள்ள அய்யங்கொல்லி கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் 9 காட்டு யானைகள் புகுந்தன. இந்த யானைகளை தொழிலாளர்கள் கண்டு அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் பிதிர்காடு ரேஞ்சர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள். தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறும் போது, சேரம்பாடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டம், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் நாங்கள் பீதியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. யானைகள் எப்போது வரும் என்பது தெரிவது இல்லை. திடீரென்று வந்து விடுகின்றன. இதனால் வேலைக்கு சென்று, திரும்பும் போதும், பணியில் இருக்கும் போதும் அச்சத்துடன் இருக்க வேண்டிய வேண்டிய நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்