மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் தச்சு தொழிலாளி பலி

கறம்பக்குடி அருகே மொபட் மீது தனியார் பஸ் மோதியதில் தச்சு தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்

Update: 2017-07-07 21:30 GMT

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டியை சேர்ந்தவர் முத்து(வயது 58). தச்சு தொழிலாளியான இவர் நேற்று மாலை ரெகுநாதபுரத்தில் தச்சு வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு அவருடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார். ரெகுநாதபுரம் பனங்குளம் அருகே வளைவில் திரும்பியபோது கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 இது குறித்து தகவல் அறிந்த முத்துவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் பஸ் அதிவேகமாக வந்ததாக கூறி, பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

 இதைத்தொடர்ந்து போலீசார் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்