விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பெண் துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பெண் துப்புரவு பணியாளருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பெரம்பலூர்,
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கோவண்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தெய்வமேரி(வயது 45). இவருக்கு திருமணமாகாததால் தனது அக்காவுடனேயே வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இவர் வேலை செய்து வந்தார்.
கடந்த 8–10–2014 அன்று பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பஸ் ஏற அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் திடீரென தெய்வேமேரியின் மீது மோதியது. இந்த விபத்தில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தனக்கு உரிய இழப்பீட்டை திருச்சி கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 23–12–2014–ல் தெய்வமேரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, ரூ.16 லட்சத்து 90 ஆயிரத்து 520–ஐ இழப்பீடாக அரசு போக்குவரத்து வழகம் தெய்வமேரிக்கு வழங்க வேண்டும் என்று 7–1–2016–ல் உத்தரவிட்டார்.
எனினும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெய்வமேரி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம், இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூருக்கு வரும் திருச்சி கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும். மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்து 235–ஐ இழப்பீடாக தெய்வமேரிக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விழுப்புரம்–திருச்சி செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர். இதனால் அந்த பஸ்சில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.