ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ‘சூட்கேஸ்’ கலாசாரம் என்று பேச்சு பேரனாக இருந்தால் என்ன, நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்
ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ‘சூட்கேஸ்‘ கலாசாரம் இருப்பதாக பிரஜ்வல் பேசி இருக்கும் நிலையில் பேரனாக இருந்தால் என்ன, நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ‘சூட்கேஸ்‘ கலாசாரம் இருப்பதாக பிரஜ்வல் பேசி இருக்கும் நிலையில் பேரனாக இருந்தால் என்ன, நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரஜ்வல் கடும் அதிருப்திகர்நாடக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ளது. மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் போட்டியிட திட்டமிட்டு அங்கு கட்சி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் எச்.விஸ்வநாத் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.
அவருக்கு உன்சூர் தொகுதியில் டிக்கெட் கொடுப்பதாக குமாரசாமி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தனக்கு டிக்கெட் கிடைக்காது என்று பிரஜ்வல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஒரு நோய் உள்ளதுஇந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் நேற்று முன்தினம் மைசூரு மாவட்டம் உன்சூரில் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, “ஜனதா தளம்(எஸ்) கட்சியில் ஒரு நோய் உள்ளது. ‘சூட்கேஸ்‘ கலாசாரம் இங்கு இருக்கிறது. கட்சியில் உண்மையான தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. ‘சூட்கேஸ்‘ கொடுப்பவர்களுக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்படுகிறது. கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் பின்வரிசையில் அமர்த்தப்படுகிறார்கள்“ என்று ஆவேசமாக பேசினார். கட்சி தலைமைக்கு எதிராக தேவேகவுடாவின் பேரனே இவ்வாறு பேசி இருப்பது அந்த கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எதிர்காலத்திற்கு தொந்தரவாக...எனது பேரன் பிரஜ்வல் பேசியுள்ளது குறித்து அவருடைய தந்தை ரேவண்ணா கருத்து தெரிவித்துள்ளார். பிரஜ்வல் கூறிய கருத்தை பெரியதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்று அவர் கூறி இருக்கிறார். பிரஜ்வல் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த ஆவேச பேச்சு, அவருடைய எதிர்காலத்திற்கு தொந்தரவாக அமையும்.
தேர்தலில் போட்டியிட எங்கள் குடும்பத்தினருக்கு டிக்கெட் கொடுப்பது தொடர்பாக இறுதி முடிவை நான் தான் எடுப்பேன். எனது குடும்பத்தை உடைக்க நான் விட மாட்டேன். பிரஜ்வலுக்கு அரசியலில் வளர ஆசை இருக்கிறது. ஆனால் இத்தகைய கருத்துகளை கூறினால் அவருக்கு டிக்கெட் கிடைக்குமா?. அவரை சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை. அவர்களுக்கு வேறு நோக்கம் இருப்பது போல் தெரிகிறது.
நடவடிக்கை எடுக்க...பிரஜ்வல் கூறியுள்ள ‘சூட்கேஸ்‘ கலாசார பேச்சை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒழுக்கம் மீறினால், மகனாக இருந்தால் என்ன, பேரனாக இருந்தால் என்ன. நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எனது மருமகள்கள் பவானி, அனிதா இருவருமே தேர்தலில் நிற்கலாம். ஆனால் எங்கள் குடும்பத்தில் இருந்து வேறு பெண்கள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்.
நான் எப்போதும் பணம் பெறும் முயற்சியில் இறங்கவில்லை. யாரிடமும் ‘சூட்கேஸ்‘ வாங்கியதும் இல்லை. தேர்தல் நேரத்தில் வட்டிக்கு கடன் வாங்கி வந்து செலவு செய்துள்ளேன். பிரஜ்வலின் கருத்தால் என்னுடைய மனது வலிக்கிறது. கட்சியை பாதுகாக்க வேண்டுமென்றால் ஒழுக்கம் முக்கியம். ஆவேசத்தில் பேசினால் எதுவும் நடக்காது. இத்தகைய பேச்சுகளை நான் நிறைய பார்த்துள்ளேன்.
குழந்தைகள் ஆட்டம் இல்லைகட்சியின் தலைவராக இருக்கும் நான், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அது தவறாகிவிடும். பேளூரில் போட்டியிட பிரஜ்வல் திட்டமிட்டு இருந்தார். அங்கு முடியாது என்று தெரிந்த பிறகு உன்சூருக்கு சென்றுள்ளார். அவரை 3, 4 பேர் தவறாக வழி நடத்துகிறார்கள். அரசியல் என்பது குழந்தைகளின் ஆட்டம் இல்லை.
ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது எவ்வளவு கஷ்டம் என்று எங்களுக்கு தெரியும். கேட்பவர்களுக்கு எல்லாம் டிக்கெட் கொடுக்க முடியுமா?. இறுதியாக கட்சியை பாதுகாப்பது மற்றும் கட்சியை ஆட்சியில் அமர வைப்பது தான் எனது நோக்கம். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு சக்தி இல்லை. அங்கு வேட்பாளர்கள் வேறு யாரும் இல்லை.
எனக்கு உடல் ஆரோக்கியம் சரி இல்லை. அங்கு எங்கள் கட்சி சார்பில் வேறு யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்பது எனது கவலையாக உள்ளது.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.