பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகள் அதிகளவில் மாசு: முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளோம்
பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகளில் அதிகளவில் மாசு ஏற்பட்டுள்ள விஷயத்தில் முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளோம் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகளில் அதிகளவில் மாசு ஏற்பட்டுள்ள விஷயத்தில் முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளோம் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
கழிவுநீரை சுத்திகரிக்கும் மையங்கள்பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் நாகச்சந்திரா, சிக்கபானவாரா, ராஜாகெனால் ஆகிய இடங்களில் மொத்தம் 65 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களின் திறப்பு விழா கே.ஆர்.புரம் கொத்தனூர் ராஜகெனாலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு சுத்திகரிப்பு மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதாவினர் செய்த தவறுகளை சரிசெய்யவே போதும் என்றாகிவிட்டது. பூங்கா நகரை குப்பை நகரமாக மாற்றினர். மாநகராட்சி சொத்துகளை வங்கிகளில் அடகு வைத்தனர். இது எல்லாவற்றையும் நாங்கள் சரிசெய்து வருகிறோம். 2006–ம் ஆண்டு 220 சதுர கிலோ மீட்டராக இருந்த பெங்களூருவின் நிலப்பரப்பு, தற்போது 800 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்து உள்ளது.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி...குமாரசாமி முதல்–மந்திரியாக இருந்தபோது அரசியல் நோக்கத்தில் 110 கிராமங்கள், 7 நகரசபைகள் பெங்களூரு மாநகராட்சிக்குள் சேர்க்கப்பட்டன. புதிதாக சேர்க்கப்பட்ட இந்த பகுதிகளில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க யாரும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெங்களூருவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு நகருக்கு தினமும் 1,800 மில்லியன் லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் 1,440 மில்லியன் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. இதில் 721 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. தலகட்டபுரா, கோரமங்களாவில் 60 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் பெங்களூருவில் தற்போது 856 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
முக்கியத்துவம் கொடுக்கவில்லைமீதமுள்ள 584 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முந்தைய அரசுகள் கழிவுநீரை சுத்திகரிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக தான் பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகள் அதிகளவில் மாசு அடைந்துள்ளது. முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் நாங்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளோம்.
பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்கள் மற்றும் 7 நகரசபைகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 1.10 கோடி மக்கள்தொகையில் தினமும் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் பெங்களூரு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் கடமை ஆகும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த விழாவில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.