தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ரிஷிவந்தியம் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-07 22:15 GMT

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 700–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதே பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொது குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படாமல் கடந்த 2 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள 3 மினி குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் மினி குடிநீர் தொட்டிகள் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீர் மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு அத்தியூர் கிராமத்தில் உள்ள சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், அத்தியூர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2 மாதத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.

ஆனால் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வேறொரு இடத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்