குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-07 22:15 GMT

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தற்போது நிலவும் வறட்சி காரணமாக பேரூராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.

இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. முன்னதாக என்.புதுப்பட்டி கிராமத்தில் இருந்து பெண்கள் பேரணியாக வந்தனர்.

பின்னர் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்த அவர்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க தலைவர் சரஸ்வதி, மாவட்ட செயலாளர் ராணி, மாவட்ட பொறுப்பாளர் சூசைமேரி உள்பட ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்திருந்து போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி இளநிலை உதவியாளர் சந்தானம்மாள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

போராட்டம் எதிரொலியாக, நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்