அவினாசி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

அவினாசி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-06 23:55 GMT
அவினாசி, 

அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தண்ணீர்பந்தல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சி.பி.எம். மாவட்ட உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில், தண்ணீர் பந்தல் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது “தண்ணீர் பந்தல், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பனியன் கம்பெனி உள்ளிட்ட பிற வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் டாஸ்மாக் கடை உள்ள ரோட்டின் வழியாக சென்று வர வேண்டியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடை அருகில் தனியார் பள்ளி உள்ளது.

பேச்சுவார்த்தை

இதனால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அமைதியாக இருந்த இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டால் வன்முறை சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் செயல்பட்டால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலகண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தாமணி, கிராம நிர்வாக அலுவலர் செண்பகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடைக்கு செல்லும் பாதையில் அமர்ந்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, உங்கள் பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் முறையாக மனு கொடுங்கள். அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். அத்துடன் கலெக்டரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்