கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சிக்கினார்

கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்;

Update: 2017-07-06 22:28 GMT
தானே,

கட்டுமான ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மின் இணைப்பிற்கு லஞ்சம்


தானே மாவட்டம் நெரல் பகுதியில் தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் 25 மாடி கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார்.

இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு கேட்டு கர்ஜத்தில் உள்ள மாநில மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விண்ணப்பித்து இருந்தார். இந்தநிலையில் கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரி பாலாஜி வாக்மோடே ஒப்பந்ததாரரிடம் ரூ.2 லட்சம் லஞ்சமாக கேட்டார்.

அதற்கு ஒப்பந்ததாரர் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் தருவதாக கூறினார். இதை மின்வாரிய அதிகாரி பாலாஜி வாக்மோடேவும் ஒப்புக்கொண்டார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இது குறித்து தானே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

அதிகாரி கைது


இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் கொடுத்த யோசனையின் படி ஒப்பந்ததாரர் சம்பவத்தன்று மின்வாரிய அதிகாரியை அவரது அலுவலகம் சென்று சந்தித்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் மின்வாரிய அதிகாரி பாலாஜி வாக்மோடேவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்