‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் இந்தியாவில் தான் அதிகம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
‘செல்பி’ மோகத்தால் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
‘செல்பி’ மோகத்தால் இந்தியாவில் தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
‘செல்பி’ மோகம்எந்த இடத்துக்கு சென்றாலும் அந்த இடத்தை பின்னணியாக வைத்து ‘செல்பி’ எடுத்துக்கொள்ளும் மோகம் இன்று இளம் வயதினர், நடுத்தர வயதினரிடையே அதிகரித்து வருகிறது. இந்த மோகமே ஆபத்திலும் முடிவடைகிறது என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.
மும்பை சுன்னாப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரீத்தி. இவர் கடந்த மாதம் 27–ந் தேதி தோழிகளுடன் மெரின் டிரைவ் பகுதிக்கு சென்றார். அப்போது ராட்சத அலையில் ‘திரிலிங் செல்பி’ எடுக்க முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக இவரை ராட்சத அலை கடலுக்குள் சுருட்டி இழுத்துச்சென்றது. கடலில் மூழ்கிய பிரீத்தியை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.
இதேபோல கடந்த மே மாதம் என்ஜினீயரிங் தேர்வு முடிந்து விடுமுறையை கொண்டாட பெற்றோருடன் வந்த மதுரை மாணவி மீனாட்சி, மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது பாறையில் இருந்து வழுக்கி கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்களை போல மும்பை மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அதிகம்மும்பையை பொறுத்தவரை போலீசார் இந்த உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் இதையும் மீறி உயிரிழப்புகள் நடக்கின்றன.
‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகமும், டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா கல்வி நிறுவனமும் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வின் முடிவில் ‘செல்பி’ மோகத்தால் உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கடந்த 2014–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 127 பேர் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், 76 உயிரிழப்புகள் இந்தியாவில் நடந்தவை ஆகும்.
பாராட்டு போதையே காரணம்2013–ம் ஆண்டு தான் ஆக்ஸ்போர்டு அகராதியால் ‘செல்பி’ என்ற வார்த்தையே அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஏன் இத்தனை மோகம்?, சாதாரண புகைப்படத்திற்காக ஏன் பலர் உயிரை மாய்த்து கொள்கின்றனர்?. இது குறித்து மனநல மருத்துவர் சல்மா பிரபு கூறியதாவது:–
உயிரை பறிக்கும் இந்த ‘செல்பி’ மோகம் இளைஞர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டி படைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் கிடைக்கும் பாராட்டு (லைக், கமண்ட்) போதையே இதற்கு முக்கிய காரணம். ‘திரிலிங்’கான படங்களை சமூக வலைதளங்களில் போட்டு நண்பர்களின் பாராட்டை பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தனது உயிரே போகும் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ‘செல்பி’ மோகம் அவர்களின் கண்களை மறைத்துவிடுகிறது. இந்த மோகத்தில் இருந்து சமூகம் வெளியே வரவேண்டும். அப்போது தான் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.