வருவாய்த்துறையினர் மோதல் சம்பவம்: 2 தாசில்தார்கள் பணியிடை நீக்கம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் இருதரப்பினராக மோதிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, 2 தாசில்தார்களை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-07-06 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இருதரப்பினராக செயல்படுகின்றனர். இதில் ஒரு பிரிவினர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் என்றும், மற்றொரு பிரிவினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம்(விடியல்) என்றும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் விடியல் சங்கத்தினர் மோதிக் கொண்டனர். அப்போது வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட துணைத்தலைவர் அசோக்குமார் ஆகியோரும், விடியல் சங்கத்தை சேர்ந்த மகேந்திரன், பாலகுரு, பாலாஜி, மற்றொரு பார்த்திபன் உள்ளிட்டோரும் தாக்கப்பட்டனர்.

இதில் காயமடைந்த வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் 3 பேரும், விடியல் சங்கத்தை சேர்ந்த 7 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


வருவாய்த்துறை அலுவலர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் விடியல் சங்கத்தை சேர்ந்த மகேந்திரன், பாலாஜி, பாலகுரு, ஆனந்தபூபாலன், பார்த்தீபன், பாலமுருகன், சேகர், மயில்வாகனன் ஆகிய 8 பேர் மீது சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், நகர் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் விடியல் சங்கத்தை சேர்ந்த மகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த குமரேசன், மற்றொரு பார்த்தீபன், கண்ணன், மூக்கையன், அசோக்குமார், கிருஷ்ணன், தமிழரசன், யுபிஷா, மணிவாசகன், நாகநாதன், முத்துகுமார், ரத்தினவேல் பாண்டியன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து விடியல் சங்கத்தை சேர்ந்த பாலாஜி, பாலகுரு ஆகிய 2 பேரை மாவட்ட கலெக்டர் மலர்விழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இவர்கள் 2 பேரும் தாசில்தார் நிலையில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து விடியல் சங்கத்தை சேர்ந்த 8 பேரையும் கைது செய்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் மாலை முதல் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்கள் அன்று இரவு முழுவதும் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் வருவாய்த்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்ததை தொடர்ந்து, அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்