தனிநபர் கழிப்பறை திட்ட பயனாளிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை

தனிநபர் கழிப்பறை திட்ட பயனாளிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் புதிய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் சந்திரசேகரன் தெரிவித்தார்.;

Update: 2017-07-06 22:15 GMT
விருதுநகர்,

மத்திய அரசு, நகர் மற்றும் கிராமப்புறங்களில் சுகாதார மேம்பாட்டிற்காக தனிநபர் கழிப்பறை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. நகர்ப்புற பயனாளிகளுக்கு ரூ.8 ஆயிரமும், கிராமப்புற பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

விருதுநகர் நகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து பயனாளிகள் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி முடித்துள்ளனர்.

ஆனால் கழிப்பறை கட்டி முடித்த பயனாளிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாத நிலை நீடித்தது. அதன் பின்னர் இதே பயனாளிகளிடம் இருந்து மீண்டும் விண்ணப்பம் பெறப்பட்டது. ஆனாலும் பணப்பட்டுவாடாவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கழிப்பறை கட்டி முடித்துள்ள பயனாளிகளிடம் இருந்து கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையின் புகைப்படங்களை சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பத்தினையும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பயனாளிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.

மேலும் சுகாதார அலுவலகத்தில் புகைப்படங்களையும், விண்ணப்பங்களையும் ஒப்படைப்பதற்கு பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. ஏன் எனில் சுகாதார அலுவலக பணியாளர்கள் களப்பணிக்கு சென்று விடுவதால் இந்த அலுவலகம் மிக குறைந்த நேரமே திறந்து வைக்கப்பட்டு இருக்கும். இதனால் பகல் நேரத்தில் விண்ணப்பங்களுடன் வரும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.


இதுகுறித்து புதியதாக பெறுப்பு ஏற்றுள்ள நகரசபை கமிஷனர் சந்திரசேகரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தனிநபர் கழிப்பறை திட்ட பயனாளிகளின் பெயர்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த காலத்தில் இதை முறையாக பராமரிக்காததால் அந்த பதிவேற்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனிநபர் கழிப்பறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் பணப்பட்டுவாடா தாமதத்தை தவிர்க்கும் வகையில் கழிப்பறை கட்டி முடித்த பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களுடன் உரிய சான்றுகளையும் பெற்று வருகிறோம்.

புதிதாக கழிப்பறை கட்ட யாரும் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கும் தகுதி அடிப்படையில் கழிப்பறை கட்ட நிதி உதவி வழங்குவதோடு, கழிப்பறை கட்டிதருவதற்கும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். விருதுநகர் நகராட்சியில் 1,014 தனிநபர் கழிப்பறை கட்டி கொடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 300 பேருக்கு மட்டுமே பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்ட செயல்பாட்டை விரைவுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்