திருவேற்காட்டில் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பறிமுதல்
திருவேற்காட்டில் தடைச்செய்யப்பட்ட 20 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அழித்தனர்.
பூந்தமல்லி,
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் கள்ளச்சந்தையில் பதுக்கி போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயச்சந்திரன், விஜயன், சுதாகர் ஆகியோர் தலைமையில் சென்று திருவேற்காடு பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள கடையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியிருந்த அறையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
20 கிலோ குட்கா பறிமுதல்
இதையடுத்து அந்த அறைக்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அங்குள்ள குப்பை மேட்டில் வைத்து தீ வைத்து எரித்து அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் ஆகும். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் சாலையோரம் உள்ள கடைகளில் விற்கப்படும் மாம்பழங்கள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டு விற்கப்படுகிறதா? என்றும் சோதனை செய்தனர்.