குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனியார் நிறுவன ஊழியரிடம் நகைகள் திருட்டு நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனியார் நிறுவன ஊழியரிடம் 5 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவான நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-07-06 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனியார் நிறுவன ஊழியரிடம் 5 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவான நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மகன் செல்வ கணபதி (வயது 27). இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தாராம். அப்போது அங்கு பஸ் பயணத்தின் போது, செல்வகணபதிக்கும், பெங்களூருவை சேர்ந்த நவின்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. செல்வகணபதி தூத்துக்குடி வந்த பின்னரும் அவர்கள் நட்பு தொடர்ந்துள்ளது.

குளிர்பானத்தில் மயக்க மருந்து

இந்த நிலையில், கடந்த 4–ந்தேதி இரவு, செல்வகணபதியிடம் நவின்குமார் செல்போனில் பேசினார். அப்போது, தான் தூத்துக்குடிக்கு வந்திருப்பதாகவும், குரூஸ்பர்னாந்து சிலை அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாகவும் அவர் கூறினாராம். இதனால் மறுநாள் காலையில் நவின்குமாரை சந்திக்க செல்வகணபதி விடுதிக்கு சென்றார். அங்கு செல்வகணபதிக்கு நவின்குமார் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் செல்வகணபதி மயங்கி விட்டதாக கூறப்படுகிறது.

நகைகள் திருட்டு

நீண்டநேரம் கழித்து செல்வகணபதி மயக்கம் தெளிந்து விழித்தபோது, நவின்குமாரை காணவில்லையாம். அத்துடன் செல்வகணபதி அணிந்திருந்த 5 பவுன் எடையுள்ள சங்கிலி, மோதிரத்தை திருடி கொண்டு நவின்குமார் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவருடைய செல்போனுக்கு செல்வகணபதி தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்ததாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகணபதி, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி சென்ற நவின்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்