எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்க்ள 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

Update: 2017-07-06 23:00 GMT

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் 750–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 5–ந் தேதி ஜெகநாதப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 296 விசைப்படகுகளில் சுமார் 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அவரது மகன் கணேஷ்(வயது 23), மதன்(20), பூபாலன்(45), சதீஸ்(30), அர்சுனன்(45) ஆகிய 5 பேரும், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சொய்பு என்பருக்கு சொந்தமான விசைபடகில் நாகநாதன்(42), அய்யாமுத்து(37), ராமமூர்த்தி(44) ஆகிய 3 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்கள் நெடுத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும், அவர்களது விசைபடகுகளையும் சிறை பிடித்து சென்றனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள காங்கேயன் ராணுவ முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஜெகநாதப்பட்டினம் விசைப்படகு சங்க தலைவர் ராமதேவன் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களிலாவது மீனவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும். தற்போது சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.


மேலும் செய்திகள்