சங்க தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

சங்க தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஒரு நாள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-06 23:00 GMT

புதுக்கோட்டை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட தலைவர் தமிழரசன், துணை தலைவர் ஆசோக்குமார் ஆகியோர் மீது ஒரு தரப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று ஒரு நாள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சொடி காணப்பட்டன. இதன்காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் உள்ள அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில துணை தலைவர் நாகராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்