அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடியில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-06 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க தூத்துக்குடி மைய தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் முஜாஹித் அலி முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தை அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தை சேர்ந்த ராஜசேகர், முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோரிக்கைகள்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழக அரசு, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள மணல் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வரலாறு காணாத மணல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பத்திரப்பதிவில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும், பத்திரப்பதிவுக்கான கட்டண வரியை குறைக்க வேண்டும், அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை முறைப்படுத்தும் வழிகளை எளிதாக்க வேண்டும், மனை பிரிவு முறைப்படுத்துதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அனைத்து கட்டுமான சங்கத்தினர் பங்கேற்பு

இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாலையில், அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தை சேர்ந்த சந்திரசேகர், வேலாயுதம், ஜான் ஜெபமணி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்த போராட்டத்தில் கட்டுமான துறையில் தொடர்புடைய அனைத்து சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்