சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும் அய்யாக்கண்ணு பேட்டி

எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

Update: 2017-07-06 23:00 GMT

திருச்சி,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை உதவி தொகை வழங்கவில்லை. 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கில் குறு, சிறு என்ற பாடுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாங்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது எங்களை சந்தித்து பேசிய முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராட்டத்தை கைவிடும்படி கேட்டார்.

அப்போது எங்களிடம் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யமாட்டோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை மீறி தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு பயிர்க்கடன் தள்ளுபடிக்கு தடையும் விதிக்கப்பட்டு விட்டது.

எனவே முதல் – அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய உத்தரவிடவேண்டும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்காக 100 விவசாயிகளுடன் வருகிற 14–ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்