மாயமான 2 வயது குழந்தை முட்டம் கடலில் பிணமாக மிதந்தது கடத்தி கொலையா?

புதுக்கடை அருகே மாயமான 2 வயது குழந்தை முட்டம் கடலில் பிணமாக மிதந்தது. குழந்தையை கடத்தி கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-07-06 23:15 GMT
மணவாளக்குறிச்சி,

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சுனிகர் (வயது 32). இவரது உறவினர் ஒருவரது திருமணம் குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையில் கடந்த 3–ந் தேதி நடந்தது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சுனிகர், தனது மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன் வந்தார்.

 வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சகாயசான்சோ திடீர் என்று மாயமானான். பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுபற்றி புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வந்தனர்.


இந்தநிலையில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் கடலில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, ஒரு குழந்தையின் உடல் மிதந்து வருவதை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தனிப்படகில் சென்று பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறையில் மாயமான 2 வயது குழந்தை சகாயசான்சோ உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்து முட்டத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த குழந்தை மாயமான சகாயசான்சோதான் என்பதை உறுதி செய்தனர்.


இதையடுத்து குழந்தையின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாயமான குழந்தை எப்படி கடலில் பிணமாக மிதந்தது? குழந்தையை யாராவது கடத்தி வந்து கொலை செய்து கடலில் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்