அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-07-05 23:00 GMT

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் மேளவாளாடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலைகள் சீரமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன.

இதில் நெ.1 டோல்கேட்டில் இருந்து மேலவாளாடி வரை இடைப்பட்ட பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதன்பிறகு அந்த வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்கக்கோரியும் நெடுஞ்சாலைத்துறை தஞ்சாவூர் கோட்டப்பொறியாளருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று லால்குடி, ஆலம்பாக்கத்தை சேர்ந்த அமல்ராஜ் மகன் அலோசியஸ்(வயது 22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். தாளக்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே வந்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சண்முகம்(52) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் வேகத்தடை இல்லாததால்தான் இதுபோன்று விபத்துகள் நடைபெறுகிறது என்றும், வேகத்தடை அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வேகத்தடை அமைக்க கோரியும், அப்பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு தாளக்குடியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியராஜா பொதுமக்களை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் அத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேகத்தடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உறுதியளிக்கும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமரசப்படுத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நெ.1 டோல்கேட்–லால்குடி செல்லும் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்