அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு: கவர்னர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
அரசியல் கட்சிகளின் போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து புதுவை கவர்னர் மாளிகையில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே புதுவை சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர்கள் 3 பேரும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் அமைதி காத்து வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சியினர், புதுவை மாநிலத்தின் உரிமையை மத்திய அரசும், கவர்னரும் பறிப்பதாக கூறி அதை கையில் எடுத்துள்ளனர்.
மத்திய அரசு மற்றும் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் வருகிற 8–ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் கவர்னர் மாளிகை முன்பு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அவ்வப்போது தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
எனவே அங்கு போராட்டங்கள் நடப்பதை தடுக்கும் விதமாக போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.