அளவுக்கு அதிகமாக மது குடித்த சூடான் நாட்டைச் சேர்ந்த வாலிபர் சாவு

சேலத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தபோது அளவுக்கு அதிகமாக மது குடித்த சூடான் நாட்டைச் சேர்ந்த வாலிபர் இறந்தார்.;

Update: 2017-07-05 23:00 GMT
சேலம்,

சூடான் நாட்டை சேர்ந்தவர் இஸ்மல் இப்ராகிம். இவரது மகன் அப்துல் அஜீஸ் (வயது 26). இவர் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு பி.எஸ்சி. (மைக்ரோ பயாலஜி) படித்தார். 2-ம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கினார்.

அவரது நண்பர்கள், சேலம் நரசோதிப்பட்டி ஆர்த்தி நகரில் வசித்து வருகிறார்கள். கடந்த 25-ந் தேதி நண்பர்களுடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக அப்துல் அஜீஸ் கோவையில் இருந்து சேலம் ஆர்த்தி நகருக்கு வந்தார். அங்கு நண்பர் உசைன் (25) என்பவருடன் தங்கினார். ரம்ஜான் பண்டிகை முடிந்ததும் அப்துல் அஜீஸ் கோவை திரும்பவில்லை.


இந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அவர் மது குடித்ததாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே நண்பர்கள் உதவியுடன் அவர் சேலம் 5 ரோடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல் அஜீஸ் உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் சேலம் சூரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சூடான் நாட்டில் உள்ள அவரது தந்தை இஸ்மல் இப்ராகிமிற்கு தகவல் கொடுத்தனர். அப்துல் அஜீஸ் உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் இருந்து பெற்றோர் வந்ததும் அவரது உடலை போலீசார் ஒப்படைக்கிறார்கள். 

மேலும் செய்திகள்