பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Update: 2017-07-05 22:00 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு 1–ந் தேதி வழங்கவேண்டிய சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதை கண்டித்து நேற்று காலை பணிகளை புறக்கணித்து பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு பணிகளுக்கு துடைப்பம், கையுறை வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் நகராட்சி பகுதிகளில் நேற்று காலையில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘‘புதிதாக மாற்றம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் மென் பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தொழிலாளர்கள் ஊதிய பட்டியல் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை சீரமைத்து இரவே வங்கிகளுக்கு பணம் அனுப்பப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களின் சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’’ என உறுதி அளித்தார்.

இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட தொழிலாளர்கள், வழக்கம் போல் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்