தொழில் அதிபர் வீட்டில் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.3.59 லட்சம் எடுத்தனர் தமிழகத்தை சேர்ந்த தம்பதி கைது
தொழில் அதிபர் வீட்டில் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.3.59 லட்சத்தை எடுத்த தமிழகத்தை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;
மங்களூரு,
தொழில் அதிபர் வீட்டில் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.3.59 லட்சத்தை எடுத்த தமிழகத்தை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தொழில் அதிபர்மங்களூரு நகர் பழநீர் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் (வயது 70). தொழில் அதிபர். இவருடைய வீட்டில் தமிழ்நாடு வேலூரை சேர்ந்த பாத்திமா (வயது 28) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பாத்திமா கடந்த ஏப்ரல் மாதம் 14–ந்தேதி வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன்பிறகு ஜாய்ஸ் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாய்ஸ் வெளிநாட்டில் இருந்து திரும்பி சொந்த ஊருக்கு வந்தார். சொந்த ஊருக்கு வந்தவுடன் ஜாய்ஸ், தனது செல்போனை ‘ஆன்‘ செய்துள்ளார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்திருந்தன.
தமிழகத்திற்கு சென்று விசாரணைஅதில், கடந்த மே மாதம் 16–ந்தேதி முதல் கடந்த மாதம் (ஜூன்) 26–ந்தேதி வரை 12 பரிவர்த்தனைகளில் ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்ததாக இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஜாய்ஸ், தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது, ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் ஜாய்ஸ் தனது வீட்டிற்கு வந்து ஏ.டி.எம். கார்டை தேடி பார்த்தார். அப்போது ஏ.டி.எம். கார்டு மாயமாகி இருந்தது.
இதனால், தனது வீட்டில் வேலை பார்த்த பாத்திமா தான் ஏ.டி.எம். கார்டை திருடி பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மங்களூரு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் மங்களூரு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் மங்களூரு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெல்லியப்பா தலைமையிலான போலீசார் தமிழ்நாடு வேலூருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலூரில் பதுங்கி இருந்த பாத்திமாவை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
ஏ.டி.எம். கார்டை திருடினார்விசாரணையில், ஜாய்ஸ் ஏ.டி.எம். கார்டை பீரோவில் வைத்திருந்தார். மேலும் அதன் அருகே ஒரு டைரியில் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணையும் எழுதி வைத்திருந்தார். இதனை அங்கு வேலை பார்த்த பாத்திமா அறிந்துள்ளார். இதனால், ஏ.டி.எம். கார்டை திருடி பணத்தை எடுக்க திட்டமிட்டார். இதற்கு அவருடைய கணவர் செல்வம் (31) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். திட்டமிட்டப்படி பாத்திமா, ஜாய்ஸ் வீட்டில் இருந்து ஏ.டி.எம். கார்டையும், டைரியையும் திருடினார். இது ஜாய்சுக்கு தெரியவில்லை.
அதன்பின்னர் அவர், ஜாய்ஸ் வீட்டிற்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இதற்கிடையே ஜாய்ஸ் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், பாத்திமா தனது கணவர் செல்வத்துடன் தமிழ்நாடு வேலூருக்கு சென்று அங்கு அந்த ஏ.டி.எம். மூலம் ரூ.3.59 லட்சத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் 20 கிராம் தங்க நகையும் அவர் வாங்கி உள்ளதும் தெரியவந்தது.
தம்பதி கைதுஇதையடுத்து மங்களூரு தெற்கு போலீசார் பாத்திமாவையும், அவருடைய கணவர் செல்வத்தையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம், 20 கிராம் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் மங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.