தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.294 வழங்க ஒப்பந்தம்
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கோவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தினக்கூலியாக ரூ.294 வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கோவை,
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கோவை மாவட்டம் வால்பாறை, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ரூ.234 தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒப்பந்தம் 30.6.2017 அன்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள தோட்ட தொழில் அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தோட்ட அதிபர்கள் சங்கத்தினர் சார்பில் சதாசிவம், பாலச்சந்திரன், மகேஷ் நாயர், ராம்குமார், பிரதீப்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்கள் சார்பில் வால்பாறை அமீது (அண்ணா தொழிற்சங்கம்), சவுந்தரபாண்டி, சுந்தர்ராஜ், செல்லமுத்து (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.) மாணிக்கம் (எச்.எம்.எஸ்.) கல்யாணி, செல்லமுத்து (எம்.எல்.எப்.), ராம்குமார் (புதிய தமிழகம்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினக்கூலியாக ரூ.293 ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட அதிபர்களுக்கும் இடையே கடந்த 2002–ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வழக்கை வாபஸ் பெறுமாறு தோட்ட அதிபர்கள் இந்த கூட்டத்தில் வற்புறுத்தினார்கள். ஆனால் வழக்கை வாபஸ் பெற முடியாது என்று தொழிற்சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
இதன்பின்னர் சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 294 ரூபாய் 3 பைசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. கூட்டத்தில் இருந்து சி.ஐ.டி.யு., விடுதலை சிறுத்தை கட்சி தொழிற்சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.