கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

கேரளாவில் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடைபெறுவதால் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கைதான விசுவ இந்து பரி‌ஷத் பிரமுகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2017-07-05 23:00 GMT
கோவை,

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 2-வது வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி காலை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்த அலுவலகம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் கட்சி அலுவலக வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டு இருந்த கார் தீயில் கருகி சேதம் அடைந்தது.

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தின் அருகே உள்ள வணிக வளாகங்கள் மற்றும் காந்திபுரம் முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை பல்வேறு இடங்களில் உள்ள 150 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சம்பவம் நடைபெறுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பு அந்த வழியாக சென்ற 600-க்கும் மேலான மோட்டார் சைக்கிள் எண்களையும் பட்டியலிட்டு விசாரணை நடைபெற்றது.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மட்டும் பதிவு எண் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம் நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 35) என்பவர் தன்னுடைய கூட்டாளியுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்தது. போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் விசுவ இந்து பரிஷத் அமைப்பில் கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளராக உள்ளார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள சரவணகுமாருக்கு திருமணமாகவில்லை.

அவர் லண்டனில் வேலை பார்த்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். சரவணகுமார் பாரதீய ஜனதா மற்றும் விசுவ இந்து பரிஷத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர். யோகா மாஸ்டராகவும் இருந்து வந்தார். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலருக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ளார்.

கைதான சரவணகுமார் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

நான் பல ஆண்டுகளாக இந்து இயக்கத்தில் பணியாற்றி வருகிறேன். கேரளாவில் இந்து இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அடிக்கடி கம்யூனிஸ்டுகளால் தாக்கப்படுகிறார்கள். இதுவரை 200-க்கும் மேலானவர்கள் தாக்கப்பட்டும், ஆளும் கம்யூனிஸ்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எதிர்ப்பை தெரிவித்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

சரவணகுமார் மீது சட்டப்பிரிவு 435 (வெடிபொருளால் தீயிட்டு சொத்தை சேதப்படுத்துதல்), தமிழக வெடிபொருள் தடுப்பு சட்டப்பிரிவு-3 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவருடைய கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சரவணகுமாரை கைது செய்த போலீஸ் தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயராஜன், ஞானசேகரன், ஏட்டுகள் அசோக், ஜம்புலிங்கம், அருண் வசந்தகுமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

சரவணகுமாரை கைது செய்தது பற்றிய தகவல் அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் அந்த கட்சியினர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது, ‘விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தங்களது அமைப்பினரை இதுபோன்ற தீய செயல்களுக்கு பயன்படுத்த கூடாது. இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிப்பதுடன், கைதானவரின் எதிர்காலமும் பாதிக்கும்’ என்று கூறினார்.

விசுவ இந்து பரிஷத் மாநில செய்தி தொடர்பாளர் ஆர்.லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு மாவட்ட அமைப்பாளர் சரவணகுமாரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் தொடர்பானவர்களை இதுவரை கைது செய்யவில்லை. போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்