தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 14–ந் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 14–ந்தேதி ஆர்ப்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் தகவல்
திண்டுக்கல்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது:–
தமிழகத்தில் பெரும்பாலான கிராம ஊராட்சிகள் பரப்பளவில் பெரிதாக உள்ளன. அவற்றை பேரூராட்சிகளாக மாற்றக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் பசுமை வீடுகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவை கிராமப்புற மக்களுக்கு கிடைக்காமல் போகும். எனவே, பரப்பளவில் பெரிய ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும்.
அதேபோல் பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்பட மாநிலம் முழுவதும் 25–க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் உள்ளன. இதனால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, அதுபோன்ற ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, புதிய ஒன்றியங்களை உருவாக்கி அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதில் பலருக்கு ஏற்கனவே வகித்து வந்த பணிகளே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில உதவி இயக்குனர்களை பழிவாங்கும் வகையில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் இல்லாததால், விவசாயம் அழிவை நோக்கி செல்கிறது.
எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் தொழிலாளர்களை, விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டும். கடந்த மார்ச் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை அந்தஸ்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதுவரை தரவில்லை.
இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதத்தில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.