வத்தலக்குண்டுவில் பரபரப்பு: பள்ளி மாணவர்கள் 4 பேர் மாயம்
வத்தலக்குண்டுவில் பள்ளி மாணவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடைவீதியை சேர்ந்த சபீர் மகன் மீரான் (வயது 14). பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சத்தார் மகன் இதிரிஸ் (14). அதே பகுதியை சேர்ந்த சேக் மகன் ரியாஜ் (14). மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் நவுபுல் (14). இதில் மீரான் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளியிலும், மற்ற 3 பேரும் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் 9–ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். பின்னர் இரவு நேரத்தில் வெளியே சென்ற 4 பேரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர். மேலும் உறவினர்கள் வீடுகளிலும் சென்றும் விசாரித்தனர். ஆனால் அவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாணவர்கள் மாயமானது குறித்து அவர்களின் பெற்றோர், வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ரம்ஜான் சமயத்தில் சுற்றுலா செல்வதற்காக அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
இதனால் அவர்கள் 4 பேரும் சுற்றுலா சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் அவர்களை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் 4 பேர் திடீரென மாயமான சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.