கடன்,வட்டி மானியம் வழங்காததை கண்டித்து நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நெசவாளர்களுக்கு கடன் மானியம் மற்றும் வட்டி மானியத்தை வழங்காத தனியார் வங்கி முன்பு நெசவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி நெசவாளர் சங்கம் மூலமாக நெசவாளர் கடன் அட்டை மூலம் கடன் பெற்ற நெசவாளர்கள் கடன் தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்தியும், கடன் மானியம் மற்றும் வட்டி மானியத்தை வழங்காத தனியார் வங்கியை கண்டித்து நெசவாளர்கள் தனியார் வங்கி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு கைத்தறி சங்க கிளைச் செயலாளர் போத்திராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளர் மகாலட்சுமி போராட்டம் குறித்து விளக்கி பேசினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமர், தங்க வேல், நீராத்திலிங்கம் உள்ளிட்ட 40–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கைத்தறி சங்க நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கான சலுகைகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு மற்ற தனியார் மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மானியம் வழங்குவதை போன்று சேத்தூரில் அமைந்துள்ள தனியார் வங்கி மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் காத்திருப்பு போரா£ட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.