பூச்சிமருந்து பாட்டிலுடன் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கோரிக்கை

கோவில்பட்டியில் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி நேற்று விவசாயிகள் பூச்சிமருந்து பாட்டிலுடன் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தை தடுக்க முயன்றால் மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என விவசாயிகள் அறிவித்திருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-07-05 23:00 GMT
கோவில்பட்டி,


கடந்த 2 ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை வாபஸ் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில செயலாளர்கள் கீதா, நம்பிராஜன், மாவட்ட தலைவர்கள் போத்திராஜ் (நெல்லை), தங்க தர்மராஜன் (அரியலூர்), ரெங்குதாஸ் (விருதுநகர்), மாவட்ட செயலாளர் துரைராஜ், காவிரி பாசன கூட்டு இயக்க தலைவர் இளங்கீரன், சாமியா, நவநீதகிருஷ்ணன், அழகர்சாமி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க முயன்றாலோ, போலீசார் மூலம் தடியடி நடத்தி விரட்டியடிக்க முயன்றாலோ பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர். சில விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலுடன் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்