இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மணலை பெற்றுக்கொள்ளலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மணலை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-05 22:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் தமிழ்நாடு மணல் இணைய சேவை பயன்படுத்துவோர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:–

மணல் உபயோகிப்பாளர்களுக்கு தங்கு தடையின்றி குறைந்த விலையில் மணல் கிடைக்க பொதுப்பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது www.tnsand.in என்ற இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம்.

மணல் பெறுவதற்கு கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசு மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதனால் உபயோகிப்பாளர்களின் மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன் தங்கு தடையின்றி குறைவான விலையில் மணல் கிடைக்கவும் வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்