அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை காணை ஒன்றியத்திற்குட்பட்ட புதுகருவாட்சி கிராம காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 30–க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுகருவாட்சி காலனி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரியும், மின்சார வசதி செய்து தரக்கோரியும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அந்த வீடுகளை சீரமைத்து தரக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.