திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2017-07-05 21:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு திடலில், சென்னை மண்டல ராணுவ அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வருகிற 19–ந் தேதி (புதன்கிழமை) முதல் 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை தலைமையிட ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் எஸ்.கே.பட், மருத்துவ அலுவலர் மேஜர் நிகுன்ச் கன்சாரா, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது:–

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதியுள்ள நபர்களை சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டார் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 22 ஆயிரம் நபர்கள் ஆன்லைன் மூலம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமின் அதிகாரபூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in மூலம் கடந்த 4.6.2017 முதல் 3.7.2017 வரை விண்ணப்பித்துள்ளனர்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் அனுமதி அட்டைகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் நபர்கள் அனுமதி அட்டை மற்றும் விண்ணப்பம் முகாம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுவர வேண்டும்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆவணங்கள் சரிபார்க்கும் தேதி, நேரம், உடற்தகுதி மற்றும் அளவீடு தேர்வு கலந்துகொள்ளும் நபர்களின் அனுமதி அட்டையில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கப்படும். உடற்தகுதி தேர்வில் அனைத்து பிரிவுகளுக்கும் 1.6 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் நடைபெறும்.

வருகிற 20–ந்தேதி அளவீடு தேர்வு மற்றும் உடல் பரிசோதனை தேர்வும் நடைபெறும். மருத்துவ தேர்வில் தகுதி பெறும் நபர்கள், சென்னை ராணுவ மண்டல தலைமை அலுவலகம் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு குறித்த தேதி மற்றும் இடம் முகாம் நடைபெறும் போது தெரிவிக்கப்படும்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆள்சேர்ப்பு முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். முகாமில் உடல்தகுதி, மருத்துவ மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு யாரும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்களின் கடினமான உழைப்பினால் மட்டும்தான் தேர்வாக முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–

22 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2 மடங்கு கூடுதலாகும். ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வாக முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலமாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்திய ராணுவம் வெளிப்படையாக நடத்துகிறது. இடைத்தரகர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் காவல்துறை மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாம் நடைபெறும் நாட்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறிய உணவகங்களும், ஆவின் பாலகமும் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்