வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைப்பு

வேலூரில் வருடக்கணக்கில் பல லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2017-07-05 21:00 GMT

வேலூர்,

வேலூரில் வருடக்கணக்கில் பல லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 24 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி சார்பில், புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு கடை வாடகைக்கு எடுப்பவர்கள் அதை வேறு நபர்களுக்கு வாடகைக்குவிட்டு பணம் பெற்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்துவதில்லை.

நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் வாடகை செலுத்துவதில்லை. அதன்படி, தொரபாடியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஒரு கடைக்கு 1½ வருடங்களாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும், மற்றொரு கடைக்கு 2 வருடங்களாக ரூ.2 லட்சமும் வாடகை பாக்கி உள்ளது.

நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் குமார் உத்தரவின்பேரில், மாநகராட்சி 4–வது மண்டல வருவாய் ஆய்வாளர் தனசேகர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்று 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர். அதேபோன்று புதிய பஸ் நிலையத்தில் நீண்ட நாட்களாக வாடகைபாக்கி செலுத்தாத 24 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட கடை உரியைமாளர்கள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்தவேண்டும். இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்