திருக்கழுக்குன்றம் அருகே துணிகரம்: அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
திருக்கழுக்குன்றம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருக்கழுக்குன்றம்,
திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஏழுமலை (39). இருவரும் கட்டிடத்தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக இருவரும் வெளியூர் சென்றுவிட்டனர். இருவரின் மனைவிகளும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின்னர் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலை திட்டப்பணிக்கு சென்றுவிட்டனர்.
வேலை முடிந்ததும், கணேசன் மற்றும் ஏழுமலையின் மனைவிகள் மதியம் வீட்டிற்கு சென்றனர். அப்போது 2 பேரின் வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கணேசன் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகையும், ஏழுமலையின் வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் 11 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.