ஒப்பந்த லாரிகளுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை உடனடி ரத்து

சென்னையில் தனியார் உணவகத்துக்கு மறை முகமாக குடிநீர் சப்ளை செய்த ஒப்பந்த லாரிகளுக்கு அபராதம் விதித்ததோடு, அதற்கு வழங்கப்பட்ட பணி ஆணையையும் குடிநீர் வாரியம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2017-07-04 22:45 GMT
சென்னை, 

பொது மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் சேவையை குடிநீர் வாரியம் ரத்து செய்தது. சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த அடிப்படையிலான லாரிகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

சென்னை குடிநீர் வாரியத்தால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு வந்தது.

பணி ஆணை ரத்து

சென்னை பள்ளிப்பட்டு நீர் நிரப்பு மையம் அருகில் உள்ள கானகம் என்ற இடத்தில் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை குடிநீர் வாரியத்துக்குட்பட்ட 2 ஒப்பந்த லாரிகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கான குடிநீரை, முறைகேடாக தனியார் உணவகத்திற்கு வினியோகம் செய்வது கண்டறியப்பட்டது.

இதே போன்று அண்ணாநகர் பகுதியில் ஒரு லாரியும், ஆலந்தூர் பகுதியில் ஒரு லாரியும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பணி ஆணையும் உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எச்சரிக்கை

இனிவரும் காலங்களில் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபட கூடாது. அப்படி ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

மேற்கண்ட தகவல்கள் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்