புழலில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது

புழலில் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலமாக இருவரும் சிக்கினர்.

Update: 2017-07-04 22:37 GMT
செங்குன்றம், 

சென்னை பெரம்பூர் திரு.வி.க.நகர் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 65). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அயனாவரம் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு திரு.வி.க.நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர் நானும் அயனாவரம் தான் செல்கிறேன் என்று கூறி, சுந்தரத்தை அழைத்து சென்றார்.

ஆனால் அவரை அயனாவரம் அழைத்து செல்லாமல் புழல் கதிர்வேடு பகுதிக்கு அழைத்து சென்ற மர்ம நபர், சுந்தரத்தை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் மதிப்பிலான தங்கச்சங்கிலி, மோதிரம் மற்றும் 1,800 ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில், சுந்தரத்தை ஆட்டோவில் ஏற்றிச்சென்றபோது மாதவரம் மேம்பாலம் அருகே ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி ஆட்டோவிற்கு பெட்ரோல் போட்டதாக சுந்தரம் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், ஆட்டோ எண் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கினர்.

2 பேர் கைது

விசாரணையில் திருநின்றவூர் லட்சுமி நகரைச் சேர்ந்த மகேஷ் (56) என்பவரும், சென்னை டிபி.சத்திரம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுதாகர் (42) என்பவரும் சேர்ந்து சுந்தரத்திடம் நகை, பணத்தை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகேஷ் திருநின்றவூரில் உள்ள மின் வாரியத்தில் வேலை செய்தபோது பணம் கையாடல் செய்ததாக கடந்த 2000-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதன்பின்னர் அவர், ஆட்டோ டிரைவர் சுதாகர் ஓட்டி வந்த ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முதியவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று அவர்களை தாக்கி நகைகள், பணம் பறிப்பது தெரியவந்தது. இதேபோல் 19 திருட்டு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்