7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை கண்டித்து சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-04 22:34 GMT
சென்னை, 

7-வது ஊதியக்குழுவில் உள்ள பாதகமான பரிந்துரைகள், முரண்பாடுகளை கண்டித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 7-வது ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகளை ஏற்க முடியாது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து துரைப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏமாற்றம்

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அதில் வீட்டு வாடகை அலவன்சு உள்பட சில அலவன்சுகளில் முரண்பாடுகள் இருந்தன. இதை கண்டித்து போராட்டம்-பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதையடுத்து ஒரு குழுவை அமைத்தார்கள். அந்த குழு ஒரு வருடமாக கூடி ஆலோசித்து ஏற்கனவே அறிவித்த அதே அலவன்சுகளை தான் மீண்டும் அறிவித்து இருக்கிறது. இந்த ஒரு வருடம் காலதாமதம் செய்து ஏமாற்றத்தை தந்து இருக்கிறார்கள்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 9-ந்தேதி பெங்களூருவில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து பேசி அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்