பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலில் மும்பையை சேர்ந்த 813 விவசாயிகள் பெயர் ஆய்வு நடத்த தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவு

பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 813 விவசாயிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது

Update: 2017-07-04 22:30 GMT

மும்பை,

பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 813 விவசாயிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதுபற்றி ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

மராட்டியத்தில் ரூ.34 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ், பயன்பெற போகும் பயனாளிகளின் பெயர் விவரத்தை நேற்று முன்தினம் அவர் வெளியிட்டார்.

அதில், அதிகபட்சமாக விதர்பா மண்டலத்தை சேர்ந்த யவத்மால், புல்தானா மற்றும் அமராவதி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 813 விவசாயிகளின் பெயரும் பயனாளிகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது திடீர் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதாவது மும்பையிலும், புறநகர் பகுதியிலும் விவசாய நிலங்கள் மிகவும் குறுகிய அளவே இருப்பதால், 813 விவசாயிகளின் பெயர் இடம்பெற்றிருப்பது பல்வேறு கேள்விக்கணைகளை எழுப்பி இருக்கிறது. ஆகையால், இதன் மீது முழுமையான ஆய்வு நடத்தி, இவற்றின் உண்மைத்தன்மையை கண்டறியுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று உத்தரவிட்டார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பயிர்க்கடன் தள்ளுபடி பயனாளிகளின் பட்டியலில், மும்பையும், புறநகர் பகுதிகளும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் முன்பு, பயனாளிகளின் விவரம் பற்றி முழுமையாக பரிசீலனை நடத்துவோம்’’ என்றார்.

காங்கிரஸ் போர்க்கொடி

இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் போலி பயனாளிகளின் விவரத்தை தெரிவித்து, விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடியதாகவும், இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்