குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

எஸ்.பட்டியில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-07-04 22:30 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கொங்கவேம்பு ஊராட்சிக்குட்பட்டது எஸ்.பட்டி. இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 4 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் 3 ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்தது. ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் இந்த கிராமத்திற்கு வழங்கப்படும் ஒகேனக்கல் குடிநீரை சிலர் மின்மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று அரூர்-ஊத்தங்கரை ரோட்டில் எஸ்.பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தாசில்தார் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் மோட்டார் வைத்து ஒகேனக்கல் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

மேலும் செய்திகள்