தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ரூ.20 கோடி கடன்உதவி வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு ரூ.20 கோடி கடன்உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

Update: 2017-07-04 22:45 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நாமக்கல் கிளையின் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தொழிற்கடன் திட்ட முகாம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இம்முகாமிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார்.


தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் பொதுகால கடன் திட்டம் எந்திரங்கள் நிதிஉதவி திட்டம், ஒற்றை சாளரக்கடன், உற்பத்தி நிறுவனம் மற்றும் அரிசி ஆலைகளுக்கு நடைமுறை மூலதன கடன், தங்கும் விடுதி மற்றும் உணவுக்கூடம் அமைப்பதற்கான கடன் உதவி திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையில் கடன் உதவி வழங்கப்படுகின்றது.


தமிழகத்திற்கு இந்தாண்டு இதுபோன்ற கடன் உதவிகள் வழங்கிட ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.20 கோடி கடன்உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகத்தின் நாமக்கல் கிளை அலுவலகத்தின் சார்பில் ரூ.13 கோடி அளவிற்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இச்சிறப்பு கடன் திட்ட முகாம் வருகிற 7-ந் தேதி வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கிளை அலுவலகத்தில் நாள்தோறும் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு மானிய உதவியுடன் கடன் உதவி பெற்று புதிய தொழில் தொடங்கி, தங்களை தொழில் அதிபர்களாக உருவாக்கி கொள்ள முன்வரவேண்டும்.


முன்னதாக கடன் உதவி வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கினார்.

முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சென்னை துணை பொதுமேலாளர் இளங்கோ, சேலம் மண்டல மேலாளர் ராமசாமி, நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராசு, நாமக்கல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் கோஸ்டல் இளங்கோ ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நாமக்கல் கிளை மேலாளர் சகாதேவன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்