பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி அரியமங்கலத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2017-07-04 23:15 GMT
திருச்சி,

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் திருச்சி விண்நகரை சேர்ந்த முகமதுஜான் பிளாஸ்டிக் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு சில்லரை வியாபாரிகளிடம் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை இந்த குடோனில் வைத்து தரம் பிரித்து, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஊழியர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் குடோனை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில் குடோனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மள,மள என பரவியது. இதில் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக்குகள் மற்றும் இதர பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள், கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வரும் அரியமங்கலம் குப்பை கிடங்கில் இருந்து தான் புகை வெளியேறுவதாக முதலில் நினைத்தனர். சிறிதுநேரத்திற்கு பின்னரே பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிவது தெரியவந்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்டு இருந்த 10 தீயணைப்பு வாகனங்கள் பிளாஸ்டிக் குடோன் இருந்த பகுதிக்கு விரைந்து சென்றன. அங்கு சென்றதும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் அதிக அளவில் குடோனில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால், உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை.

குடோனில் இருந்து வெளியேறிய கரும்புகை அந்த பகுதி முழுவதும் பரவியதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.


அதற்குள் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பிளாஸ்டிக் குடோனின் அருகே காய்ந்த கருவேல முட்செடிகளும், சில அடி தூரத்தில் ரெயில்வே தண்டவாளமும் உள்ளது. அந்த வழியாக ரெயிலில் சென்ற மர்ம நபர் யாராவது, பீடி, சிகரெட்டை தூக்கி வீசியதில் காய்ந்த முட்செடிகளில் தீப்பிடித்து, அதைத்தொடர்ந்து அருகே இருந்த பிளாஸ்டிக் குடோனுக்கும் தீ பரவி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்