வேலைவாய்ப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2017-07-04 22:45 GMT
திருவண்ணாமலை,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை முதல் வாரத்தை தொழில்நெறி வழிக்காட்டும் விழிப்புணர்வு வாரமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் கடந்த 3-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தந்த மனுதாரர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு முடிவடைந்தது.

இதில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சென்றனர்.

முன்னதாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ. முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்த வேலைவாய்ப்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்