திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய மறுத்து ஊழியர்கள் போராட்டம்

5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண் டித்து திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்ட ணம் வசூல் செய்ய மறுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.;

Update: 2017-07-04 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறை சுங்கச்சாவடியில் (டோல்கேட்) வேலை செய்யும் ஊழியர்கள் கடந்த மாதம் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பண்டிகை காலத்தில் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் அனைத்தும் திருமாந்துறை சுங்கச்சாவடியை கடந்து சென்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சுங்கச்சாவடி நிர் வாகத்தினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பேரில் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

5 பேர் பணியிடை நீக்கம்

ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக திருமாந்துறை சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கசாவடி ஊழியர்கள் விஜயகுமார், மணிகண்டன், சிலம்பரசன், வீரகுப்தர், ஸ்டாலின் ஆகிய 5 பேரை நேற்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சுங்கச்சாவடி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் சக சுங்கச்சாவடி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சுங்கச் சாவடி ஊழியர்கள் நேற்று திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதோடு அவர்கள் கட்டணம் வசூல் செய்ய மறுத்து விட்டனர். இதனால் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு வரை கட்டணம் செலுத்தாமல் அந்த சுங்கச்சாவடியை கடந்த பலதரப்பட்ட வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாக பயணம் சென்றதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்