மதுக்கரை வேணி உடனுறை திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி

கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மதுக்கரை வேணி உடனுறை திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-07-04 23:00 GMT
கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரத்தில் பழமை வாய்ந்த மதுக்கரை வேணி உடனுறை திருக்கண்மாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இக்கோவிலின் மெயின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மூலவர் கதவையும் திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவு திறக்கமுடியவில்லை. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் தப்பியது.


ஆனால் கோவிலின் உள்புறம் அமைந்துள்ள அலுவலக அறையை திறந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கருவியை திருடி சென்று விட்டனர். மேலும் பீரோக்களை உடைத்து பார்த்துள்ளனர். கொள்ளை முயற்சி நடந்தபோது கோவிலில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் கோவிலை திறந்தபோது தான் கொள்ளை முயற்சி அறங்கேறியது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி(பொறுப்பு) யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்